தோவாளையில் துணிகரம்: என்ஜினீயர் வீடு-கோவிலில் கொள்ளை ஆசிரியர் வீட்டிலும் திருட முயற்சி


தோவாளையில் துணிகரம்: என்ஜினீயர் வீடு-கோவிலில் கொள்ளை ஆசிரியர் வீட்டிலும் திருட முயற்சி
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தோவாளையில் என்ஜினீயர் வீடு மற்றும் கோவிலில் கொள்ளை நடந்தது. ஆசிரியர் வீட்டிலும் திருட முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தோவாளையில் என்ஜினீயர் வீடு மற்றும் கோவிலில் கொள்ளை நடந்தது. ஆசிரியர் வீட்டிலும் திருட முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

என்ஜினீயர்

தோவாளை கமல் நகரை சேர்ந்தவர் பாக்கிய சுப்பிரமணியன் (வயது 38). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அய்யம்மாள் (34). இவர்களுக்கு மகள் இருக்கிறாள். சென்னையில் பாக்கிய சுப்பிரமணியன் குடும்பத்துடன் வசித்து வந்தார். மகளின் படிப்புக்காக 6 மாதங்களுக்கு முன் தோவாளையில் உள்ள அய்யம்மாளின் அக்கா பேச்சியம்மாள் வீட்டுக்கு வந்தனர். அங்கு மாடியில் மகளுடன் அய்யம்மாள் வசித்து வருகிறார்.

பகலில் மாடியில் தங்கியிருக்கும் அவர் இரவில் மகளுடன் அக்காள் வீட்டில் தங்குவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு மாடி வீட்டை பூட்டிவிட்டு கீழே உள்ள அக்காள் வீட்டுக்கு மகளுடன் தூங்க சென்றார். நேற்று காலை 6.45 மணி அளவில் மாடி வீட்டுக்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

நகை-பணம் கொள்ளை

இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணி-மணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 8 பவுன் சங்கிலி, மோதிரம், கம்மல், கைச்செயின் 4 பவுன் ஆக மொத்தம் 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

கோவிலில் கைவரிசை

மேலும் தோவாளை கிருஷ்ணன்புதூர் குளத்துவிளையில் உள்ள இசக்கியம்மன் கோவில் கதவை உடைத்து உண்டியலில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுதவிர வேல்முருகன் நகரில் வசிக்கும் ரமேஷ்பாபு என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் பீரோவை உடைத்துள்ளார். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. ரமேஷ்பாபு சென்னையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். ஒரே நாள் இரவில் இந்த அடுத்தடுத்த சம்பவம் நடந்துள்ளது.

துணைசூப்பிரண்டு

இந்த கொள்ளை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சப் -இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீபன், சுந்தர் சிங் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையனின் ரேகையை பதிவு செய்தனர். ஆனால் கொள்ளையன் சாமர்த்தியமாக பதிவான ரேகைகளை அழித்துள்ளான். இருப்பினும் ஓரிரு இடங்களில் இருந்த ரேகைகளை சேகரித்தனர். இந்த 3 இடங்களிலும் ஒரேயொரு மர்மநபர் தான் ஈடுபட்டிருக்கலாம் என

இந்த 3 சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம்

--

இந்த கொள்ளை தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இரவு 11.15 மணிக்கு இசக்கியம்மன் கோவிலில் மர்ம நபர் சாமி கும்பிடுவதும், நள்ளிரவு 1.39 மணிக்கு ஒரு தெருவில் கையில் கம்பி மற்றும் டார்ஜ் லைட்டுடன் மர்ம நபர் வருவதும், 2.20 மணிக்கு கையில் பார்சலுடன் செல்வதும் பதிவாகி இருந்தது. எனவே மர்ம நபர் கடைசியில் தான் கோவிலில் கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். கண்காணிப்பு கேமரா பதிவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் சிலவாரங்களுக்கு முன் நடந்த கொள்ளையின் போது பதிவாகி இருந்த மர்ம நபரின் உருவமும், தற்போது பதிவாகி உள்ள உருவமும் ஒன்று போல் தான் தோன்றுவதாக போலீசார் தெரிவித்தனர். எனவே இரு சம்பவங்களிலும் ஒரே கொள்ளையன் ஈடுபட்டு உள்ளான். விரைவில் பிடிபடுவான் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

----



Next Story