கோவில்பட்டிவெங்கடாசலபதி கோவிலில் கொள்ளை
கோவில்பட்டிவெங்கடாசலபதி கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வெங்கடாசலபதி கோவிலில் பத்மாவதி தாயார் கழுத்தில் கிடந்த தங்க தாலியை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார். போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வருகி்ன்றனர்.
வெங்கடாசலபதி கோவில்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபதி கோவில், வடக்கு இலுப்பையூரணியில் உள்ளது. இக்கோவில் அர்ச்சகராக அதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் உள்ளார். நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். கோவிலில் இரவு காவல் பணியில் கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி இருந்தார். இரவு 9.45 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடைபட்டது.
இதனால் காவலாளி வேலுச்சாமி, கோவில் கதவுகளை பூட்டிவிட்டு படுத்து விட்டார். நள்ளிரவு 12.30 மணியளவில் கோவில் சன்னதி பூட்டு உடைக்கப்பட்டு கீழே விழுந்த சத்தம் கேட்டு எழுந்த காவலாளி வேலுச்சாமி, கொள்ளையன் ஓடியதை கண்டு கூச்சல் போட்டார். அதற்குள் கொள்ளையன் கோவிலுக்குப் பின்புறம் வைத்திருந்த ஏணியின் வழியாக சுவரில் ஏறி ஏணியை வெளிப்பக்கம் வைத்து இறங்கி ஓடிவிட்டான்.
கேமரா ஒயர் துண்டிப்பு
தகவல் அறிந்ததும் அர்ச்சகர் கோவிலுக்குள் வந்து பார்வையிட்டபோது, உற்சவர் சன்னதியில் உள்ள பத்மாவதி தாயார் கழுத்தில் அணிவிக்கப்பட்ட 2 கிராம் தங்க தாலியை கொள்ளையன் திருடிச் சென்றது தெரியவந்தது. கொள்ளையன் ஓடும்போது அவன் கொண்டு வந்த கட்டர் மற்றும் பொருட்கள் அடங்கிய பையை விட்டுச் சென்றதும் தெரிய வந்தது.
இதுபற்றி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு, செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தகவல் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் காந்தி, கனகசுந்தரம் மற்றும் போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர் முருகன், கோவிலில் பதிவான ரேகைகளை பதிவு செய்தார். கொள்ளையன் கோவிலுக்குள் நுழைந்ததும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் ஒயர்களை துண்டித்ததும் தெரிய வந்தது.
தனிப்படை அமைப்பு
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.