விழுப்புரத்தில்ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு வலைவீச்சு
விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேடு வ.உ.சி. நகரில் வசித்து வருபவர் தங்கமணி (வயது 60). இவர் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவர் கடந்த மாதம் 17-ந் தேதியன்று தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்த அவர்கள் இருவரும் மீண்டும் நேற்று காலை விழுப்புரம் வந்தனர்.
நகை, பணம் கொள்ளை
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7 பவுன் நகைகள், ¼ கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து தங்கமணி, விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். 2 வாரமாக வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை, வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.