சென்னிமலை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சென்னிமலை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

சென்னிமலை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஏ.டி.எம். அறை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வெள்ளோடு ரோட்டில் அசோகபுரம் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக ஏ.டி.எம் அறைக்குள் நுழைந்துள்ளார்கள்.

முதலில், கண்காணிப்பு கேமராவில் காட்சி எதுவும் பதிவாகாமல் இருக்க அதை மூடி உள்ளனர். பின்னர் ஏ.டி.எம் எந்திரத்தின் அடிப்பகுதியை உடைத்துள்ளனர். அந்த சமயத்தில் ஏ.டி.எம் எந்திரம் செயல்படாமல் இருந்ததால் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. உடனடியாக அவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தப்பி ஓடினர்...

சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அந்த சமயத்தில் கொள்ளை முயற்சி நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தையன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து அருகில் உள்ள சரவணன் நகர் வரை சென்று விட்டு மீண்டும் திரும்பியது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சமீபத்தில் தொடர்ந்து 3 நாட்கள் சென்னிமலை பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் தற்போது சென்னிமலை பகுதியில் இரவு, பகலாக 50 போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையும் மீறி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Next Story