கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
சேவூர்
சேவூர் முறியாண்டம்பாளையம் காமராஜர் நகரில் பிரசித்தி பெற்ற புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டி சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போதுகோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி, கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்கு தகவல்தெரிவித்தார்.
உடனே போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கோவிலின் பிரதான உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கருவறை பூட்டும் உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியும் கொள்ளை போயிருந்தது. நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள்புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் மற்றும் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த தங்க தாலியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.