அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை தக்கலை அருகே பரபரப்பு
தக்கலை அருகே அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தக்கலை:
தக்கலை அருகே அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
அம்மன் கோவில்
தக்கலை அருகே உள்ள மேலாங்கோட்டில் அக்காள்-தங்கையான செண்பகவல்லி, நீலா பிள்ளை என இரு அம்மன் கோவில்கள் உள்ளன. இதில் செண்பகவல்லி அம்மன் கோவிலின் பின்புற சுவர் வழியாக நேற்று அதிகாலை 4 மணிக்கு மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்குள்ள உண்டியலின் பூட்டை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர்.
பின்னர் அங்கிருந்த பீரோ மற்றும் தகர பெட்டிகளை உடைத்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த விலைஉயர்ந்த பொருள் எதுவும் இல்லாமல், அம்மனுக்கு அணிவிக்கும் துணிகளும், பூஜை பொருட்களும் மட்டுமே இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொள்ளை
அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த ஏணியை எடுத்து சென்று அதில் ஏறி அருகில் உள்ள சிவாலய ஓட்டத்தின் எட்டாவது சிவன் கோவிலான காலகாலர் கோவிலுக்கு சென்றனர்.
அந்த கோவிலில் இருந்த இரும்பு உண்டியலின் பூட்டை உடைத்து, அதில் இருந்த ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
விசாரணை
இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு சிவன் கோவிலுக்கு பூசாரி சிதம்பரம் வந்த போது தான் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. உடனே அவர் கோவில் நிர்வாகி கவிதாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு தக்கலை போலீசில் புகார் செய்தார். இதுபோல் செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகிகளும் புகார் செய்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கோவிலுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை நடந்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.