முதியவரை கட்டிப்போட்டு மதுக்கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்த கும்பல்
திருவோணம் அருகே முதியவரை கட்டிப்போட்டு மதுக்கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
திருவோணம் அருகே முதியவரை கட்டிப்போட்டு மதுக்கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
மது பாட்டில்கள் கொள்ளை
தஞ்சை மாவட்டம் திருவோணம்-பட்டுக்கோட்டை பிரதான சாலை நம்பிவயல் காட்டாறு அருகே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். இதன்பிறகு அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த மதுக்கடை அருகே படுத்து தூங்கியுள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு சென்ற ஒரு கும்பல் தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு மதுக்கடை ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
வலைவீச்சு
இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற டாஸ்மாக் அதிகாரிகள், கொள்ளையடிக்கப்பட்ட மது பாட்டில்கள் எத்தனை? அதன் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து தீவிர கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கட்டிப்போட்டு விட்டு மதுக்கடையை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடித்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.