மூதாட்டியை ஏமாற்றி 10 பவுன் நகை கொள்ளை


மூதாட்டியை ஏமாற்றி 10 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 6 May 2023 9:13 PM IST (Updated: 6 May 2023 9:15 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே முயல் வாங்குவது போன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே முயல் வாங்குவது போன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியாக இருந்த மூதாட்டி

திருவண்ணாமலை தாலுகா கீழ்அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் வியாசியாமேரி (வயது 78). இவருடன் அவரது மகள் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் வீட்டின் மாடியில் முயல் வளர்த்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வியாசியாமேரி வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது மொபட்டில் அவரது வீட்டிற்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து உள்ளார். அந்த பெண், மூதாட்டியிடம் முயல் வாங்குவது போன்று பேச்சு கொடுத்து உள்ளார்.

இதையடுத்து மூதாட்டி, அந்த பெண்ணை மாடிக்கு அழைத்து சென்று முயலை காண்பித்து உள்ளார். பின்னர் அந்த பெண் முயலை வாங்கிச் செல்ல கீழே மொபட்டில் உள்ள கோணிப்பையை எடுத்து வருகிறேன் என்று மூதாட்டியிடம் கூறிவிட்டு சென்று உள்ளார்.

10 பவுன் நகை கொள்ளை

இதை நம்பி மூதாட்டி மாடியிலேயே இருந்து உள்ளார். பின்னர் அந்த பெண் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுவிட்டார்.

நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால் மாடியில் இருந்து மூதாட்டி கீழே வந்து உள்ளார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முயல் வாங்க வந்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story