தபால்காரர் உள்பட 2 பேரிடம் வழிப்பறி


தபால்காரர் உள்பட 2 பேரிடம் வழிப்பறி
x

திருச்சியில் பட்டப்பகலில் தபால்காரர் உள்பட 2 பேரிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி

திருச்சியில் பட்டப்பகலில் தபால்காரர் உள்பட 2 பேரிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செல்போன் பறிப்பு

திருச்சி கே.கே.நகர் அய்யப்பன் நகர் நேதாஜி வீதியில் வசித்துவருபவர் பிரேம்குமார் (வயது 46). தபால்காரராக பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் காலை பொன்மலைப்பட்டி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாலிபர், பிரேம்குமாரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரேம்குமாரிடம் செல்போனை பறித்துச்சென்றது சுப்பிரமணியபுரம் அண்ணா நகரை சேர்ந்த அகஸ்டின்கெவின் (20) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அகஸ்டின் கெவினை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணம் பறிப்பு

இதுபோல் திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவர் சம்பவத்தன்று காலை அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய சட்டைப்பையில் இருந்த ரூ.850-ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். இதுபற்றி, அவர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கருப்பசாமியிடம் பணத்தை பறித்துச்சென்றது, திருச்சி பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த வீரமுத்து (25) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீரமுத்துவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். பட்டப்பகலில் துணிகரமாக நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்குதல்

திருச்சி வடக்கு தாரநல்லூர் சூரஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (23). இவர் சுமைப்பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி இ.பி.ரோடு பகுதியில் உள்ள குறிஞ்சி கல்லூரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் (24), ஆனந்த் (22), சிலம்பரசன் (25) ஆகியோர் சிவகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையாளும், குச்சியாலும் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story