ஆசிரியர் வீட்டில் நகைகள் கொள்ளை- முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அட்டகாசம்
ஆலங்குளத்தில், அதிகாரி வீட்டை தொடர்ந்து ஆசிரியர் வீட்டிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர்
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில், அதிகாரி வீட்டை தொடர்ந்து ஆசிரியர் வீட்டிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் வீடு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் நகரில் வசிப்பவர் திருமலை முருகன். கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு வீட்டிலும் கொள்ளை நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
அதே தெருவில் வசிப்பவர் ராம்குமார். இவர் கடங்கநேரியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வெளியூர் சென்றிருந்த ராம்குமார் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தார்.
நகைகள் கொள்ளை
அப்போது, வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.
முகமூடி ஆசாமிகள்
கொள்ளை நடந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் திருப்பி வைத்து விட்டு கண்காணிப்பு கேமரா பதிவுகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க்கையும் திருடி சென்றுள்ளனர்.
தொடர்ந்து அருகிலுள்ள மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 2 திருடர்கள் முகமூடி அணிந்து அந்த சாலையில் அங்குமிங்கும் அலைந்த காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.
நோட்டமிட்டு கைவரிசை
நோட்டமிட்டு அதன் பின்னரே வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து கொள்ளை சம்பவத்தை அந்த திருடர்கள் அரங்கேற்றி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அதிகாரி வீடு, ஆசிரியர் வீடு ஆகிய இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.