ஓசூர் பகுதியில் ரோஜாக்களை தாக்கும் டவுனி நோய்-நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை
ஓசூர்:
ஓசூர் பகுதியில் ரோஜா செடிகளை டவுனி நோய் தாக்கி வருவதால், நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ரோஜா பூக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மண்வளம் மற்றும் சீரான தட்ப வெட்பநிலை கொண்ட பகுதியாகும். இதனால் ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. திறந்தவெளி மற்றும் பசுமைக்குடில்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் விவசாயிகள் ரோஜா பூக்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் மற்றும் பல்வேறு விழாக்களை கொண்டாட ஓசூர் பகுதியிலிருந்து ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் ஒரு கோடி ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
நோய் தாக்குதல்
தற்போது ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகளை டவுனி என்ற குளிர்கால நோய் தாக்கி வருகிறது. ரோஜா செடிகளை தாக்கும் இந்த நோய், மெல்ல மெல்ல இலைகள், மொட்டுக்கள் மற்றும் பூக்களை கருக செய்கிறது. இதனால் ரோஜா செடியில் உள்ள இலைகள், மொட்டுக்கள், பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விடுகிறது.
இந்த நோயால் ரோஜா பூக்களின் தரமும், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது சந்தையில் ரோஜாவுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த சூழ்நிலையில் நோய் தாக்கத்தால் பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது, விவசாயிகளை வேதனை அடைய வைத்துள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
இந்த நோயை கட்டுப்படுத்த தேவையான ரசாயன மருந்துகளை விவசாயிகள் செடிகளின் மீது தெளித்து வருகிறார்கள். ஆனாலும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள். மேலும் டவுனி நோய் தாக்கத்தால் ரோஜா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நோய் தாக்கத்தால் ரோஜா செடிகளும் பாதிக்கப்படுவதால் வருகிற கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் காதலர் தினத்தின் போது ரோஜா பூ சாகுபடி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. எனவே டவுனி நோயை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.