பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் அறை சேதம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை சேதமானது. தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை சேதமானது. தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
பட்டாசு ஆலை
சிவகாசி வேலாயுதம் சாலையை சேர்ந்தவர் பாலாஜி பாவநாசம் (வயது 40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பள்ளப்பட்டி- செங்கமலப்பட்டி ரோட்டில் உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 80-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளது.
இந்த நிலையில் சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை விட்டு, விட்டு பெய்து வருவதால் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் உற்பத்தியை நிறுத்தி வைத்து இருக்கிறது. இதேபோல் வெடி விபத்து நடை பெற்ற இந்த பட்டாசு ஆலையிலும் கடந்த ஒரு வாரமாக பட்டாசுகள் உற்பத்தி நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வெடித்த பட்டாசு
ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ரசாயன மாற்றம் ஏற்பட்டு நேற்று மாலை திடீரென வெடித்துள்ளது.
இதில் அந்த ஒரு அறை மட்டும் தரைமட்டமானது. அருகில் இருந்த 2 அறைகள் லேசான சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கும், சிவகாசி கிழக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெடிக்காமல் இருந்த பட்டாசுகளை செயல் இழக்க செய்தனர். பட்டாசு ஆலைக்கு நேற்று விடுமுறை விடப்பட்டதால் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.