பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் நிறுத்தம்


பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Aug 2023 1:15 AM IST (Updated: 19 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் ஒரு மாதம் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல்

ரோப்கார்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.

மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியே செல்ல முடிவதால் ரோப்காரையே பெரும்பாலான பக்தர்கள் விரும்புகின்றனர். பழனியில் ரோப்கார் சேவை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது. மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறும்.

வருடாந்திர பராமரிப்பு

அதேபோல் மாதத்துக்கு ஒருநாள், வருடத்துக்கு ஒரு மாதம் என ரோப்காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்போது அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணியின்போது ரோப் (கம்பி வடம்) பெட்டிகள் ஆகியவை கழற்றி சீரமைப்பு செய்யப்படும். அதோடு பழுதடைந்த உபகரணங்கள் மாற்றப்படும்.

இந்நிலையில் நேற்று, பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பழனி ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. எனவே இன்று முதல் ஒரு மாதத்துக்கு அதன் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று வரலாம் என கூறப்பட்டு உள்ளது.


Next Story