ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது
ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.
ஊட்டி
ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.
கோடை விழா
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி போன்றவை நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டு கோடை விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. மேலும் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, நேற்று முன்தினம் நடைபெற்றது.
ரோஜா கண்காட்சி
இதன் தொடர்ச்சியாக, நேற்று ஊட்டியில் 18-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இதை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில் சுமார் 35 ஆயிரம் வண்ண ரோஜாக்களை கொண்டு 29 அடி உயரத்தில் ஈபிள் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மட்டைப்பந்து, இறகு பந்து, ஆக்கி, கால்பந்து போன்ற விளையாட்டு உபகரணங்களும் காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.
'செல்பி' எடுத்து மகிழ்ச்சி
இது தவிர குழந்தைகளை கவரும் வகையில் யானை, முயல் போன்ற விலங்குகளின் உருவம், மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு, சிறுதானிய ஆண்டு, அங்கக வேளாண்மை, ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனது குறித்த அலங்காரங்கள் இடம்பெற்று உள்ளது. இவை சுமார் 55 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதை குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகள்
இந்த கண்காட்சியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துறையினர் சார்பில் ரோஜா மலர்களை கொண்டு அலங்காரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது.
தொடக்க நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ரானா, எம்.எல்.ஏ.க்கள் மோகன், நந்தகுமார், ராஜா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் ஷிப்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.