வீட்டுக்குள் அழுகிய நிலையில் தாய்-மகள் பிணம்
சாத்தூர் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் தாய், மகள் பிணமாக மீட்கப்பட்டனர்.
சாத்தூர் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் தாய், மகள் பிணமாக மீட்கப்பட்டனர்.
துர்நாற்றம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தால் முத்துராமலிங்கபுரம் நாகம்மாள் ேகாவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 97). இவருடைய கணவர் ராமசாமி. இவர்களுடைய மகள் அன்னலட்சுமி (75). இந்தநிலையில் ராமசாமி இறந்தார். இதையடுத்து தனலட்சுமி, முத்துசாமி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மாரியப்பன், பாலகிருஷ்ணன் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணனின் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அவரது வீட்டில் தனலட்சுமியும், அன்னலட்சுமியும் வசித்து வந்தனர். இந்தநிலையில் தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
தாய் - மகள் பிணம்
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ராஜபாளையத்தில் வசிக்கும் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாரியப்பனும், அவரது உறவினரும் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு தனலட்சுமியும், அன்னலட்சுமியும் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
உடல்கள் அழுகிய நிலையில் கிடப்பதால் அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமி வயது முதிர்வு காரணமாகவும், அன்னலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாகவும் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.