ரூ.120 கோடியில் சிவகாசியில் சுற்றுச்சாலை


ரூ.120 கோடியில் சிவகாசியில் சுற்றுச்சாலை
x

ரூ.120 கோடியில் சிவகாசியில் சுற்றுச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வரவும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சிவகாசிக்கு வந்து செல்கிறது.

போக்குவரத்து நெரிசல்

சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் கனரக வாகனங்களை நிறுத்த கூட சிவகாசியில் போதிய இடவசதி இல்லை. இந்த நிலையில் சிவகாசியை கடந்து செல்லும் வாகனங்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தது. இதை தவிர்க்கும் வகையில் சிவகாசி, திருத்தங்கல் நகரின் வெளியே சுற்றுச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தது. அப்போதைய அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அப்போதைய அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி அதற்கான பணிகளை தொடங்க தேவையான நிதிகளை அரசிடம் இருந்து பெற்று தந்தார்.

ரூ.120 கோடியில் சாலை

33 கிலோ மீட்டர் தூரம் அமைய உள்ள இந்த சுற்றுச்சாலை சிவகாசி தாலுகாவில் உள்ள திருத்தங்கல், கீழ திருத்தங்கல், நமஸ்கரித்தான்பட்டி, வடபட்டி, ஈஞ்சார், ஆனையூர், கொங்கலாபுரம், வெற்றிலையூரணி, அனுப்பன்குளம், நாரணாபுரம் ஆகிய தாய் கிராமங்கள் வழியாக அமைக்கப்படுகிறது.

இந்த சுற்றுச்சாலை அமைக்க தேவையான இடங்கள் 80 சதவீதம் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுச்சாலைக்காக 450 பேர் தங்களுக்கு சொந்தமான நிலங்களை கொடுத்துள்ளனர். நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டும் ரூ.82 கோடி இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தவிர்த்து சுற்றுச்சாலை அமைக்க ரூ.40 கோடி செலவாகும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் சிவகாசி சுற்றுச்சாலை ரூ.120 கோடி செலவில் உருவாகிறது.

தாமதம் ஏன்?

கடந்த 2018-ல் தான் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது வரை 50 சதவீத பணிகள் நடந்துள்ளதாக கூறும் அதிகாரிகள் பணிகளை விரைந்து முடித்தாலும் இந்த ஆண்டு இறுதியில் தான் முடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே சுற்றுச்சாலை அமைய கால தாமதம் ஆனதற்கு காரணம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். சிவகாசி சுற்றுச்சாலை அமைக்கும் பணியினை வேகப்படுத்தினால் வருகிற 2024-ல் சாலை அமைக்கும் பணி தொடங்கி அந்த ஆண்டே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எந்தவித சமரசமும் செய்யாமல் அதிகாரிகள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.


Next Story