சீர்காழியில் ரவுடி வெட்டிக் கொலை:விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண்
சீர்காழியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெட் தினேஷ் என்கிற தினேஷ் (வயது 27). கஞ்சா, சாராய வியாபாரியான இவர் சீர்காழி போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
கடந்த 25-ந் தேதியன்று இரவு கோவில்பத்து என்ற இடத்தின் அருகே தினேஷ் காரில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது.
முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறையை சேர்ந்த முத்துப்பாண்டி, சரண்ராஜ், மயிலாடுதுறை தர்மாபுரத்தை சேர்ந்த கீர்த்திகரன், கழுக்கானிக்குப்பத்தை சேர்ந்த அம்மாயி என்ற பாரதி உள்ளிட்ட 8 பேரை சீர்காழி போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கீர்த்திகரன் (21), பாரதி (27) ஆகிய இருவரும் நேற்று காலை விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து நீதிபதி ராதிகா உத்தரவின்பேரில் அவர்கள் இருவரும் விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.