ஜாமீனில் வந்த ரவுடி படுகொலை


ஜாமீனில் வந்த ரவுடி படுகொலை
x

சேலத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சேலத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரபல ரவுடி

சேலம் அன்னதானப்பட்டி தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவருடைய மகன் ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி, அரிசி கடத்தல், திருட்டு உள்பட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அன்னதானப்பட்டி கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய வழக்கில் ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ரஞ்சித்குமார் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

ஜாமீனில் வந்தவர்

இதனிடையே, கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரவுடி ரஞ்சித்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் 2-வது மனைவி பிரியாவுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு இரவு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி பிரியா மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை தேடி வந்தனர்.

கொலை

இந்த நிலையில், உடையாப்பட்டி வேடியப்பன் கோவில் அருகே உள்ள குடிநீர் குழாய் திறந்து விடப்படும் தொட்டி பகுதியில் நேற்று இரவு ரஞ்சித்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது, ரஞ்சித்குமாரை கொலை செய்த மர்ம கும்பல் அவரது உடலை பள்ளத்தில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், ரஞ்சித்குமார் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து 2-வது மனைவியான பிரியாவுடன் மாசிநாயக்கன்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். ஆனால் அவரது முதல் மனைவியுடன் நண்பர் சுரேஷ் என்பவர் நெருங்கி பழகி வந்ததாகவும், இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரஞ்சித்குமாரையும், சுரேசையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டுள்ளனர்.

போலீசார் வலைவீச்சு

இந்த மோதல் தொடர்பாக ரவுடி ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டு அவரது உடலை உடையாப்பட்டி பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரை 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்திருக்கலாம் என்பதால் அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சேலத்தில் ஜாமீனில் வந்த பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story