நாகர்கோவிலில் நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்:நடுரோட்டில் ரவுடி குத்திக்கொலை; நண்பனுக்கும் கத்திக்குத்து
நாகர்கோவிலில் நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் கத்தியால் குத்தி ரவுடி படுகொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற நண்பருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளிைய போலீசார் கைது செய்தனர்.
நாகா்கோவில்:
நாகர்கோவிலில் நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் கத்தியால் குத்தி ரவுடி படுகொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற நண்பருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளிைய போலீசார் கைது செய்தனர்.
ரவுடி
நாகர்கோவிலில் உள்ள பட்டகசாலியன்விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29). இவர் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது கோட்டார் மற்றும் நேசமணி நகர் போலீஸ் நிலையங்களில் சில வழக்குகள் உள்ளன. மேலும் கோட்டார் போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலில் இவரது பெயரும் உள்ளது.
இவருக்கும், பீச்ரோடு பெரியவிளையை சேர்ந்த தொழிலாளியான சிவசங்கர் (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த ஆண்டு ரஞ்சித்தின் வீட்டுக்குள் சிவசங்கர் உள்ளிட்ட 4 பேர் நுழைந்து பொருட்களை சூறையாடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் ரஞ்சித்தின் தாயார் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பிறகு ரஞ்சித்துக்கும், சிவசங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கத்திக்குத்து
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு ரஞ்சித்தும், அவருடைய நண்பா் விக்னேஷ் (29) என்பவரும் பெரியவிளை மளிகை கடை முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுத்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார். பின்னால் ரஞ்சித் அமர்ந்து இருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த சிவசங்கர் திடீரென மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை சரமாரியாக குத்தினார். இதில் அவரது தலை மற்றும் மார்பு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது.
கத்தியால் குத்தும் போது, என் மீது எப்படி புகார் அளிக்கலாம், நீ என்ன பெரிய ரவுடியா? என்று கேட்டபடி ஆவேசமாக சிவசங்கர் தாக்குதலில் ஈடுபட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். மேலும், இதை தடுக்க வந்த விக்னேஷையும் சிவசங்கர் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பினார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த பகுதியில் நின்ற அஜித் என்பவர் மீட்டு மோட்டாா் சைக்கிளில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக இறந்தார்.
அதே சமயம் படுகாயமடைந்த விக்னேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவசங்கரை கைது செய்தனர்.
முன் விரோதத்தில் ரவுடி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.