ரவுடி வசூர்ராஜா குண்டர் சட்டத்தில் கைது


ரவுடி வசூர்ராஜா குண்டர் சட்டத்தில் கைது
x

51 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வசூர்ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கான ஆணை கோவை ஜெயிலில் இருக்கும் அவரிடம் வழங்கப்பட்டது.

வேலூர்

ரவுடி வசூர்ராஜா

வேலூர் புதுவசூரை சேர்ந்தவர் ராஜா என்கிற வசூர்ராஜா (வயது 36). ரவுடியான இவர் மீது வேலூர் வடக்கு, சத்துவாச்சாரி, விரிஞ்சிபுரம், ஆற்காடு டவுன் உள்பட பல்வேறு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, ஆள் கடத்தல், கொலை, அடி-தடி உள்ளிட்ட 51 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வசூர்ராஜா கடந்த மாதம் 28-ந் தேதி வேலூர் சத்துவாச்சாரியில் பெயிண்டு கடை நடத்தி வரும் பாஷாவை வழிமறித்து கத்தியை காட்டி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்தார். மேலும் ரூ.5 லட்சத்தை ஓரிருநாளில் தயாராக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி சென்றார்.

குண்டர் சட்டத்தில் கைது

இதுகுறித்து பாஷா சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே வேலூரை அடுத்த பெருமுகையில் பதுங்கியிருந்த வசூர்ராஜாவை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். நிர்வாக காரணங்களுக்காக வசூர்ராஜா மறுநாள் வேலூர் ஜெயிலில் இருந்து கோவை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் வசூர்ராஜா ஜாமீனில் வெளியே வந்தால் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட கூடும் என்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் வசூர்ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து அந்த ஆணையை சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி கோவை ஜெயிலில் இருக்கும் வசூர்ராஜாவிடம் வழங்கினார்.


Next Story