சேலத்தில் என்ஜினீயரிடம் ரூ.1½ கோடி மோசடி-பெங்களூருவை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு


சேலத்தில் என்ஜினீயரிடம் ரூ.1½ கோடி மோசடி-பெங்களூருவை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு
x

சேலத்தில் என்ஜினீயரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சேலம்

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் விஜய் வெங்கடேஷ். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் பெங்களூருவை சேர்ந்த பரத்வாஜ் (வயது 52) என்பவர் அறிமுகமானார். இவர் பெங்களூருவில் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார்.

விஜய் வெங்கடேசிடம் பரத்வாஜ், தனது நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய விஜய் வெங்கடேஷ், அந்த நிறுவனத்தில் ரூ.1 கோடியே 60 லட்சம் முதலீடு செய்தார். அதன்பிறகு பரத்வாஜ் கூறியபடி எந்த ஒரு தொகையையும் அவருக்கு கிடைக்கவில்லை..

வழக்குப்பதிவு

இதையடுத்து விஜய் வெங்கடேஷ் தான் முதலீடு செய்த பணத்தை அவரிடம் திரும்ப கேட்டார். இதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து விஜய்வெங்கடேஷ், போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயலை சந்தித்து புகார் மனு கொடுத்தார். இந்த மோசடி புகார் குறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரத்வாஜ் தன்னுடைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி விஜய் வெங்கடேசிடம் ரூ.1 கோடியே 60 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பரத்வாஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story