குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 பேரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
ஈரோடு மாநகர் பகுதியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 பேரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 பேரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
கூடுதல் அபராதம்
தமிழக முழுவதும் புதிய போக்குவரத்து விதிமுறைகள் கடந்த 26-ந்தேதி முதல் அமலுக்கு வந்தன. அதன்படி வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1,000 விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு, காளை மாட்டு சிலை, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.
குடித்துவிட்டு...
அப்போது வாகன விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்தவர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள் என 130 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. மேலும் இவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டு உள்ளது.