மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு
திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு மர்ம நபருக்கு வலைவீச்சு
திருவாரூர்:
நாகை மாவட்டம் அண்டக்குடி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம். இவர் கார் பழுது நீக்கும் மற்றும் பழைய கார் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்துள்ள தனது நகையை மீட்க ரூ.1 லட்சத்தை மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்து கொண்டு திருவாரூர் வந்துள்ளார். திருவாரூர் நாகை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு வங்கியின் வாசலில் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுத்து வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் டேங் கவரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பன்னீர் செல்வம் திருவாரூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.