தமிழகத்தில் புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ.1½ கோடி அபராதம் அமைச்சர் தகவல்


தமிழகத்தில் புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ.1½ கோடி அபராதம் அமைச்சர் தகவல்
x

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.1½ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் புகையிலை தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் புகையிலை இல்லா நிலையை கடைப்பிடிப்பதை பாராட்டி கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 20 மாவட்டங்களில் செயல்பட்டுவரும் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் போன்று செங்கல்பட்டு, நீலகிரி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தென்காசி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 10 மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் நடப்பாண்டில் நிறுவ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

100 கல்வி நிறுவனங்கள்

புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி தமிழகத்தில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 223 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 76 லட்சத்து 28 ஆயிரத்து 887 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் உபயோகத்தினால் ஏற்படும் தீமைகள் மற்றும் புகையிலைப் பொருட்கள் தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இதுவரை 1,204 பயிற்சி வகுப்புகளில் 71 ஆயிரத்து 452 பேர் பயன் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 13 ஆயிரத்து 80 பள்ளிகளும், 1,344 கல்லூரிகளும் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு உலக புகையிலை ஒழிப்புதினத்தை முன்னிட்டு சென்னை, அதன் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த 100 கல்வி நிறுவனங்களை புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் என கண்டறியப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1.59 கோடி அபராதம்

புகையிலை மற்றும் நிகோடின் சேர்ந்த உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், வினியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபடும் 3 ஆயிரத்து 63 கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1.59 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 கடைகளுக்கு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் ஆயிரம்விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் டாக்டர் குருநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story