ரூ.10½ லட்சம் மோசடி; ஒருவர் கைது
மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10½ லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்:
சின்னசேலம் அருகே உள்ள செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலு(வயது 44). இவர் மலேசியாவில் கார் வாட்டர் சர்வீஸ் பணிக்கு சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வல்லத்தரசு(48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது வல்லத்தரசு, மலேசியாவில் பல வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய வேலு, தனது மனைவி காந்தி மூலம் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 32 பேரிடம் ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்தை வசூலித்து வல்லத்தரசுக்கு கொடுத்தார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து காந்தி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லத்தரசுவை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு முகவரை பார்க்க வந்த வல்லத்தரசுவை போலீசார் கைது செய்தனர்.