தொழிலாளி வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை


தொழிலாளி வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை
x

ஆரணி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

ஆரணி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழிலாளி குடும்பத்துடன் சுற்றுலா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரிகரன் நகர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58), பட்டு நெசவு தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (50). இவர்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மனோகரன் தனது மனைவி, மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோக்கள் உடைக்கப்பட்டு, துணி, பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை

பீரோக்களில் இருந்த 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்ககள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதன்மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கைரேகை நிபுணர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழிலாளி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story