லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

அணைக்கட்டு

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேர ரோந்து மற்றும் வாகன தணிக்கை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி தலைமையில் போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகாலை 2 மணிக்கு பெங்களூருவில் இருந்து வேலூர் நோக்கி சென்ற ஒரு லாரி சுங்கச்சாவடியில் வந்து நின்றது. லாரியில் இருந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியுடன், அதில் வந்த நபர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

அங்கு லாரியை சோதனை செய்ததில் 50-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது. இதுகுறித்து லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜெயா நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவரது மகன் ராஜேஷ் (வயது 31), புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் ரமேஷ் (23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சென்னைக்கு கடத்தி செல்வதாக ஒப்புக்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் 500 கிலோ இருக்கும் என்றும், அதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

2 காலம்.


Next Story