விருத்தாசலத்தில் ரூ.12½ கோடி வரிபாக்கி: வரியை வசூலிக்க களத்தில் இறங்கிய நகரமன்ற தலைவி, அதிகாரிகள்குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், சீல் வைக்கவும் உத்தரவு
விருத்தாசலத்தில் பாக்கியாக உள்ள ரூ.12½ கோடி வரியை வசூலிக்க நகரமன்ற தலைவி, அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர். வரி கட்டாத வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், கடைகளை சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விருத்தாசலம்
விருத்தாசலத்தில் குடிநீர் வரி, சொத்து வரி, காலி மனை வரி, தொழில் வரி, கடை வாடகை என நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி ரூ.12½ கோடி உள்ளது. இந்த வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பல ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள், அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ளவர்களிடம் வரியை வசூலிப்பதற்காக நகரமன்ற தலைவி டாக்டர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் சேகர் மற்றும் அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களே நேரடியாக சென்று வரி வசூலிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவு
அந்த வகையில் கடலூர் சாலையில் இருந்த ஒரு தியேட்டர் இடிக்கப்பட்டு காலி மனையாக இருக்கிறது. இந்த தியேட்டர் அமைந்திருந்த 1995-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை நகராட்சிக்கு வரி செலுத்தவில்லை. இந்த வகையில் அந்த தியேட்டர் வரி மட்டும் ரூ.7 லட்சத்து 19 ஆயிரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டியுள்ளது. எனவே விருத்தாசலம் நகர மன்ற தலைவி டாக்டர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையாளர் சேகர், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், முத்துக்குமரன், தீபா முத்து, ராஜேந்திரன், அழகு பிரியா, கருணாநிதி, நகராட்சி ஊழியர்கள் நேற்று தியேட்டர் உரிமையாளரிடம் வரி வசூலிக்க சென்றனர். அப்போது அங்கு தியேட்டர் உரிமையாளர் இல்லை. அங்கிருந்த ஊழியர்களிடம் விரைவில் வரி நிலுவையை கட்ட வேண்டும். இல்லையெனில் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல் அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களிடம் நேரில் சென்று வரி வசூலித்தனர். வரி கட்டாதவர்களின் கடைகளை சீல் வைக்கவும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் ஆணையாளர் சேகர் உத்தரவிட்டுள்ளார்.