இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.14 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.14 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் பீடி இலை கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் வீரபாண்டியன்பட்டினம் ஜீவாநகர் கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பீடி இலைகள்
அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு படகை போலீசார் சோதனை செய்ய சென்றனர். அந்த சமயத்தில் படகில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக தப்பி ஓட முயன்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த பிரபு (வயது 41), தூத்துக்குடி அலங்காரத்தட்டை சேர்ந்த ஜெயக்குமார் (32), இந்திராநகரை சேர்ந்த ரட்சகர் (36), தூத்துக்குடி மாதவநாயர் காலனியை சேர்ந்த ரஞ்சித் (42) என்பது தெரியவந்தது.
கைது
தொடர்ந்து போலீசார் படகில் சோதனை செய்தனர். அதில் 41 பண்டல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது சுமார் 1,435 கிலோ பீடி இலைகள் மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.14 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் பீடி இலை பண்டல்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு ஆகியவற்றை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
படகு, பீடி இலை மற்றும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.