ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி
ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மோசடி
கூட்டத்தில் பள்ளிகொண்டா அருகே உள்ள ஈடியர்பாளையத்தை சேர்ந்த பெண்கள் அளித்துள்ள மனுவில் நாங்கள் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களாக உள்ளோம். குழுவை நடத்தி வந்தவர் குழுவில் நாங்கள் செலுத்திய பணத்தை எடுத்துவிட்டார். மேலும் எங்களது பெயரை பயன்படுத்தி வேறு நிதி நிறுவனங்களில் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் தனித்தனியாக கடன் பெற்றார். அந்த பணத்தையும் அவர் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வி.எஸ்.சி.வெங்கடேசன் அளித்துள்ள மனுவில், வேலூர் மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட பலமடங்கு வசூலிக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனைத்து பள்ளிகளிலும் கட்டண பட்டியல் வைக்க பள்ளிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ஜ.க. ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் பல ஆண்டுகளாக ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவில் கும்பாபிஷேகம் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த கோவிலுக்கு அறங்காவலர் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நல்லவிதமாக நடந்து வரும் கோவில் நிர்வாகத்தை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. எனவே இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலை வாங்கித்தருவதாக
குடியாத்தம் பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்த 2 பேர் தனித்தனியாக அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது மகனுக்கு அரசு வேலை தேடி வந்தோம். இந்தநிலையில் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த சிலர் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். இதைநம்பி நாங்கள் ரூ.14 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வேலைவாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுகின்றனர். எனவே எங்களது மனு குறித்து விசாரணை மேற்கொண்டு பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தொடர் மழையின் காரணமாக மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு குறைந்த அளவு மக்களே வந்திருந்தனர். இதனால் மனுக்கள் பெறும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.