கஞ்சா வியாபாரிகளின் ரூ.15 லட்சம் சொத்துகள் முடக்கம்


கஞ்சா வியாபாரிகளின் ரூ.15 லட்சம் சொத்துகள் முடக்கம்
x

நத்தத்தில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.15 லட்சம் மதிப்பிலான சொத்துகளை போலீசார் முடக்கினர்.

திண்டுக்கல்

140 கிலோ கஞ்சா கடத்தல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பிரிவில் கடந்த பிப்ரவரி மாதம் நத்தம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் கடத்தி வரப்பட்ட 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் 7 பேர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதில் அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த குணசேகரன், அழகு, அம்சுபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கஞ்சா வியாபாரிகளான 3 பேரின் சொத்துகளை முடக்கும்படி தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவிட்டார்.

ரூ.15 லட்சம் சொத்துகள்

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 3 பேருடைய சொத்துகளின் விவரங்களை சேகரித்து, அவற்றை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

அதன்படி குணசேகரன், அம்சுபாண்டி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயரில் இருந்த வீடு, நிலம், வீட்டுமனை என மொத்தம் ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளை போலீசார் முடக்கினர். இதேபோல் கஞ்சா விற்பனை செய்வோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயரில் இருக்கும் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story