எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி
முன்னாள் அமைச்சர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் வேலை
குமரி மாவட்டம் குழிக்கோடு கோடியூர் சரல்விளையை சேர்ந்தவர் ஜான் பெனட் (வயது 61). இவர் நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
என் மகள் பெவின் ஜெர்சிகா என்பவர் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வருகிறார். நான் அந்த கிளினிக்கில் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு திக்கணங்கோடு பனவிளையை சேர்ந்த காண்டிராக்டர் ஜெயசிங் (44) என்பவரை தெரியும். அவருக்கு முன்னாள் அமைச்சர் ஒருவருடன் நல்ல பழக்கம் இருப்பதாகவும், அவர் மூலமாக தன்னுடைய மனைவிக்கும், மேலும் சிலருக்கும் அரசு வேலை வாங்கி கொடுத்ததாகவும் என்னிடம் கூறினார்.
இந்த நிலையில் என் மகள் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிய தேர்வு எழுதி இருந்தார். எனவே, அந்த மருத்துவமனையில் என் மகளுக்கு ஆயுர்வேத டாக்டர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். அதற்கு ரூ.15 லட்சம் வேண்டும் என்று கேட்டார். இதை நம்பி என் மகளின் நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.15 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்தேன். பணம் பெற்றுக் கொண்ட ஒரு மாதத்தில் பணி நியமன உத்தரவு வாங்கி தருவதாக கூறியிருந்தார். ஆனால் வாங்கி தரவில்லை. எனவே பணத்தை திரும்ப கேட்டபோது முன்னாள் அமைச்சர் இன்னும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என சாக்குபோக்கு சொல்லி வருகிறார்.
ரூ.15 லட்சம் மோசடி
அவர் வேலை வாங்கி தருவதாக என்னை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்துள்ளார். இதற்கிடையே அடகு வைத்த நகைக்கு வட்டி மட்டும் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் செலவு செய்துள்ளேன். இதுதொடர்பாக போலீசில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஜெயசிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மனு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் ஜெயசிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.