தி.மு.க. பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை-மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லையில் பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
நெல்லையில் பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தி.மு.க. பிரமுகர்
நெல்லை மகாராஜநகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன். தி.மு.க. பிரமுகர். இவரிடம் நெல்லை தியாகராஜ நகரைச் சேர்ந்த துரை என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் பரமசிவ அய்யப்பன் நேற்று டிரைவர் துரையிடம் வங்கிகளில் தனது சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுத்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார். அதன்படி அவர் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள 2 வங்கிகளில் பரமசிவ அய்யப்பனின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை எடுத்தார்.
ரூ.17 லட்சம் கொள்ளை
பின்னர் பாளையங்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள வங்கியில் பணம் எடுப்பதற்காக துரை காரை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது அவர் காரின் முன்பக்க இருக்கையில், ரூ.17 லட்சம் அடங்கிய பையை வைத்து இருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அந்த காரின் முன்பக்க பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
சிறிதுநேரத்தில் வங்கியில் இருந்து வெளியே வந்த துரை, காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பரமசிவ அய்யப்பனுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
உடனே நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.