ரூ.1,763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் தொடக்கம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு


ரூ.1,763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் தொடக்கம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதியுடன் ரூ.1,763 கோடி செலவில் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக்கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்.

அரசின் கவனம் மிகுதியாகத் தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத்திறனாளிகளாகும். அவர்களின் உரிமைகளைக் காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையை உறுதி செய்யவும் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை தற்போது ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளிகள் பயனடைகின்றனர்.

மாற்றுத்திறனாளிக்கான திட்டங்கள்

மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற உலகச் சிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தொழில் தொடங்க உதவி செய்ய, குறைந்தபட்சக் கல்வி தகுதியை 8-ம் வகுப்புத் தேர்ச்சியாக குறைத்தும், வயது உச்ச வரம்பை 45-லிருந்து 55 ஆக உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமின்றி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக உத்தரவிடப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 சதவீத வீடுகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதற்காகத் தள்ளுவண்டி கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

வழிகாட்டி நெறிமுறை

மாவட்ட அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்குப் பொது இடங்களில் தடையற்ற சூழலை அமைக்கும் நடவடிக்கையாக, சாய்தளப் பாதை, மின்தூக்கி பொருத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை, பார்வையற்றோர் பயன்பாட்டிற்காக தரைத் தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

செவித்திறன் குறைபாடு உடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்ய தகவல் பலகைகள், சைகை மொழிபெயர்ப்பாளர்கள் நியமனம் போன்ற வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுடன் 1,763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும்.

சமூகப் பதிவு அமைப்பு மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும்.

இப்படி மாற்றுத்திறனாளிகளுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்தக் காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர்

இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், சு.ரவி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர். ஆனந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாநில ஆலோசனை வாரியக் குழுவினுடைய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பணிகளின் நிபுணர்கள். அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


Next Story