ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கு ரூ.187 கோடியில் சுத்திகரிப்பு ஆலை: முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
ஓசூர் பகுதியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களுக்காக சுத்திகரிப்பு ஆலை ரூ.187 கோடியே 20 லட்சம் மதிப்பில் நிறுவப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாட்டினார்.
சென்னை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு 2 கட்டங்களாக 20 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட 3-ம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு ஆலையை ரூ.187 கோடியே 20 லட்சம் மதிப்பில் நிறுவுவதற்கான திட்டப் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்துக்கான முதற்கட்ட பணிகள் 15 மாதங்களில் நிறைவு பெற இருக்கின்றன. இதன் மூலம் 2 ஆயிரத்து 92 ஏக்கரில் அமைந்துள்ள ஓசூர் சிப்காட் தொழிற்பூங்கா, 989 ஏக்கரில் அமைந்துள்ள சூளகிரி சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் ஓசூர் மண்டலத்தில் 1,800 ஏக்கரில் அமைய இருக்கும் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவை பூர்த்திசெய்யப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பயன்பெறும்.
முதலீடு, வேலைவாய்ப்பு
இதனால் இந்த பகுதிகளில் நிலத்தடி நீரும், மேற்பரப்பு நீரும் பாதுகாக்கப்படும், புதிய தொழிற்சாலைகள் அமைந்திட வாய்ப்பு ஏற்பட்டு, கூடுதலாக 6 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டு நிகழ்வு முடிந்ததும், சிப்காட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் இருந்து திருவண்ணாமலை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள 537 பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் கொள்முதல் செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
வாகனங்கள்
அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வனத்துறை களப்பணியாளர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2 கோடியே 42 லட்சம் செலவில் 200 மின்சார இருசக்கர வாகனங்கள், ரூ.4 கோடியே 63 லட்சம் மதிப்பில் 50 பொலிரோ ஜீப்புகள், வன உயிரின அவசர மீட்பு பணிகள் மற்றும் காயமுற்ற வன உயிரினங்களுக்கு அவசர சிகிச்சை அளித்திட ரூ.5 கோடியே 25 லட்சம் செலவில் 35 மீட்பு மற்றும் மறுவாழ்வு வாகனங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) சுப்ரத் மஹாபத்ர மற்றும் அரசு உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.