ரூ. 192 கோடியில் மீன்பிடி துறைமுகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்


ரூ. 192 கோடியில்  மீன்பிடி துறைமுகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்
x

தரங்கம்பாடியில், ரூ. 192 கோடியில் மீன்பிடி துறைமுகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என கால்நடை பராமரிப்பு முதன்மை செயலாளர் கூறினாா்.

மயிலாடுதுறை

பொறையாறு:

தரங்கம்பாடியில், ரூ. 192 கோடியில் மீன்பிடி துறைமுகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என கால்நடை பராமரிப்பு முதன்மை செயலாளர் கூறினாா்.

மீன்பிடி துறைமுகம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆய்வு செய்தார். தரங்கம்பாடியில் மீனவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ. 192 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மீனவா்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க 1070 மீட்டா் தொலைவு, 15 அடி உயரம், 6 மீட்டா் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

225 எந்திர படகுகள்

இந்த துறைமுகம் 800 பைபர் படகுகள் மற்றும் 225 எந்திர படகுகள் ஆகியவற்றை நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. தரங்கம்பாடி தாலுகா பகுதியை சேர்ந்த 24 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில்

படகுகளை நிறுத்தும் வசதியுடன், சேமிப்பு கிடங்கு, மீன் இறங்கு தளம், ஏலக்கூடம், படகுகள் பழுது நீக்கும் இடம், ஓட்டல்கள், ஏ.டி.எம்.மையங்கள், கடைகள், கழிவறைகள், சுகாதார மையம், தீயணைப்பு வசதிகள், வலைபின்னும் கூடம், உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் இந்த மீன் பிடித் துறைமுகம் கொண்டிருக்கும்.

ஆய்வுப்பணி

மீன்பிடி துறைமுகத்தில் 90, சதவீதம் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் துறைமுக பணியை ஆய்வு செய்தார்.

இந்த பணியை விரைந்து முடித்து அடுத்த மாதம் (மார்ச்) துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். என்றும் துறைமுகத்தில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின் போது மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, தலைமை பொறியாளர் ராஜு, செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.


Next Story