மகள் போல பழகி ரூ.2½ கோடி, 100 பவுன் நகை கொள்ளை; இளம்பெண்ணுக்கு வலைவீச்சு
மகள் போல பழகி கைவரிசை காட்டிச்சென்ற இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை புலியகுளம் ரோடு கிரின் பீல்டு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. அவர், தனது கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2-வது மகள் வேலை காரணமாக வெளியூரில் உள்ளார்.
வெங்கடேசன் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே வீட்டில், ராஜேஸ்வரி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட ராஜேஸ்வரிக்கு, சிங்காநல்லூரை சேர்ந்த வர்ஷினி (26) என்ற இளம்பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கமானார். தொழில் முறையில் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி, ராஜேஸ்வரியிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார் வர்ஷினி.
மேலும் தன் மூலம் பலருக்கு நிலத்தை விற்பனை செய்து கொடுத்துள்ளார். இதற்காக அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்று வந்த வர்ஷினி, அவருக்கு சாப்பிட ஏதாவது கொண்டு சென்று உள்ளார்.
மகள் போல பழகினார்
மேலும் அவரை தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு சாப்பிட்டீர்களா, உடலை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் என்று கேட்டு வந்து உள்ளார். இதனால் ராஜேஸ்வரிக்கு வர்ஷினியை மிகவும் பிடித்து விட்டது. வர்ஷினியும் மகள் போல பழகி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இரவு ராஜேஸ்வரியின் வீட்டுக்கு சென்ற வர்ஷினி இட்லியும், நாட்டுக்கோழி குழம்பும் வைத்து கொண்டு வந்திருப்பதாக கூறி ராஜேஸ்வரியிடம் சாப்பிட கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், தனக்கு தூக்கம் வருவதாக கூறிய ராஜேஸ்வரி, வீட்டின் பிரதான அறையில் இருந்த ஷோபாவிலேயே படுத்து தூங்கிவிட்டார்.
படுக்கை அறையில் இருந்து வந்தார்
பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு லேசாக தூக்கம் கலைந்து எழுந்தார். அப்போது அவரது படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த வர்ஷினியை பார்த்து, எனது படுக்கை அறைக்கு ஏன் சென்றாய் என்று கேட்டார்.
அதற்கு வர்ஷினி, கழிவறை சென்றேன் என்று கூறினார். பின்னர் ராஜேஸ்வரி, தனது படுக்கை அறைக்கு சென்றார். அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இவர் யார்?, இங்கு என்ன நடக்கிறது என்று வர்ஷினியை பார்த்து கேட்டு உள்ளார்.
மாயமான நகை-பணம்
இதனால் திடுக்கிட்ட வர்ஷினி, பதில் எதுவும் கூறாமல் அந்த நபருடன் வீட்டில் இருந்து வெளியேறி, காரில் ஏறி சென்றுவிட்டார்.
இதற்கிடையே இட்லியும், கறிக்குழம்பும் சாப்பிட்டதில் சோர்வாக இருந்த ராஜேஸ்வரி, மீண்டும் படுத்து தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைத்து இருந்த ரூ.2½ கோடி ரொக்கப்பணம், 100 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேஸ்வரி, வர்ஷினியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அதன் பிறகே தனக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அவர் உணர்ந்தார்.
போலீசார் விசாரணை
பின்னர் நடந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் வர்ஷினி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அருண்குமார் (37) என்பவர் உள்பட 4 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அருண்குமார், பொன்னேரி பகுதியை சேர்ந்த பிரவீன் (32), சுரேந்தர் (25) ஆகியோர் பொன்னேரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
3 பேர் கைது
இதையடுத்து பொன்னேரி விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த அருண்குமார், பிரவீன், சுரேந்தர் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம், 31 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இளம்பெண்ணுக்கு வலைவீச்சு
மேலும் தலைமறைவாக உள்ள வர்ஷினி, அவருடைய கார் டிரைவர் நவீன்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.