கம்போடியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி; தாய்-மகன் மீது வழக்கு
கம்போடியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2½ லட்சம் மோசடி செய்த தாய் மற்றும் மகன் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கம்போடியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2½ லட்சம் மோசடி செய்த தாய் மற்றும் மகன் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ரூ.2½ லட்சம்
ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் நீதிராஜன்(வயது 28). டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு வேலை தேடி வந்த நிலையில் முதுகுளத்தூர் அருகே உள்ள கொளுந்தூரை பகுதியை சேர்ந்த நைனா முகம்மது மனைவி செய்யது ரூகானி என்பவர் தனது மகன் மகாதீர் முகம்மது கம்போடியா நாட்டில் நல்ல வேலை செய்து வருவதாகவும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக இருப்பதாகவும் கூறி நீதிராஜனை கம்போடியா நாட்டிற்கு அழைத்து கொள்வான் என்று மகனின் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.
அந்த எண்ணை பெற்றுக்கொண்ட நீதிராஜன் மகாதீர் முகம்மதுவை தொடர்பு கொண்டபோது கம்போடியா நாட்டில் நல்ல சம்பளத்தில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார். மேலும் நீதிராஜனின் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு விசா கட்டணம் மற்றும் டிக்கெட் செலவுகளுக்காக தாயும், மகனும் சேர்ந்து ரூ.2½ லட்சம் பெற்றுக்கொண்டார்களாம். இந்த பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் நீதிராஜனை கடந்த ஜூன் மாதம் கம்போடியா நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அனுப்பி வைத்து அங்கு டேட்டா என்ட்ரி வேலை கொடுக்காமல் சீன நிறுவனத்தினரிடம் சேர்த்து விட்டுள்ளனர். சீன நிறுவனத்தினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்து பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டு நீதிராஜன் உள்ளிட்ட பல பேரை ஆன்லைன் மோசடி வேலைகளில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக நீதிராஜன் இந்திய தூதரகத்திடம் புகார் செய்த நிலையில் மீட்கப்பட்டவர் அந்த நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக கூறி ரூ.2½ லட்சம் அபராதம் செலுத்தியதோடு விமான கட்டணம் செலுத்தி சொந்த ஊருக்கு வந்துள்ளார். நீதிராஜன் போன்று பல நபர்களை இவ்வாறு ஏமாற்றி அழைத்து சென்று கொத்தடிமைகளாக வைத்து மோசடியான வேலையை செய்ய வைத்து கொடுமைப்படுத்தி வருவதாக தன்னை ஏமாற்றிய தாய், மகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிராஜன் ராமநாதபுரம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன் மற்றும் போலீசார் இதுதொடர்பாக தாய், மகன் மீது வழக்குபதிவு செய்து விசரித்து வருகின்றனர்.