ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக கூறி சேலம் வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி-போலீசார் விசாரணை
ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக கூறி, சேலத்தில் வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுதிநேர வேலை
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவரது செல்போன் வாட்ஸ்அப்புக்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு தருவதாக கூறப்பட்டு இருந்தது. இதை உண்மை என நம்பிய பிரபு வாட்ஸ் அப்பில் குறிப்பிடப்பட்ட லிங்கை பதிவிறக்கம் செய்தார்.
அதில் சில நிபந்தனைகளை பணம் கட்டி நிறைவேற்றினால் உடனடியாக வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் பிரபு அதில் கூறப்பட்டிருந்த வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ.2 லட்சம் செலுத்தினார். அதன் பிறகும் அவருக்கு பகுதிநேர வேலை குறித்த எந்த தகவலும் வரவில்லை.
போலீசார் விசாரணை
உடனே தகவல் வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை பிரபு உணர்ந்தார்.
இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் இந்த மோசடி குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.