நெல்லையில் ரூ.20 லட்சம் செல்போன்கள் மீட்பு
காணாமல் போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டன
நெல்லை:
காணாமல் போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டன.
செல்போன்கள் மீட்பு
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில், மாநகர பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் மற்றும் வங்கிக்கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து வந்தனர்.
துணை போலீஸ் கமிஷனர்கள் டி.பி.சுரேஷ்குமார் (கிழக்கு), கே.சுரேஷ்குமார் (மேற்கு) ஆகியோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், வித்யாலட்சுமி, கலைசந்தனமாரி உள்ளிட்டோர் தீவிரமாக விசாரணை நடத்தி ரூ.20 லட்சத்து 12 ஆயிரத்து 200 மதிப்புள்ள 104 செல்போன்களை மீட்டனர். அந்த செல்போன்கள் அனைத்தையும் உரியவர்களிடம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் வழங்கினார்.
பண மோசடி
அதே போல் இணையதளம் மூலம், வேலை வாங்கி தருவதாக கூறியும், பரிசு விழுந்து இருப்பதாக கூறியும் பண பரிவர்த்தனைக்கான ஓ.டி.பி. எண்ணை பெற்று வங்கி கணக்கில் இருந்து மோசடியாக எடுக்கப்பட்ட மொத்தம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 17-ஐ வங்கி மூலமாக திரும்ப பெற்று பணத்தை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இணையதள வழி மூலமாக பண மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில,் 12 பேருக்குரிய ரூ.15 லட்சத்து 83 ஆயிரத்து 154 உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது.