ஒர்க் ஷாப்பில் தீ; ரூ.20 லட்சம் வாகனங்கள் எரிந்து சேதம்
கடையநல்லூரில் ஒர்க் ஷாப்பில் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் ஒர்க் ஷாப்பில் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தீப்பிடித்து எரிந்தது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் 9-வது தெருவில் வசித்து வருபவர் அப்துல் காதர் மகன் சுலைமான். இவர் கடையநல்லூர் அட்டை குளம் பெட்ரோல் பல்க் அருகில் நெடுஞ்சாலை பகுதியில் கார், லாரி, டிராக்டர், புதிய டிரெய்லர் பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு சென்றார். அதன் பின்னர் இரவு 11 மணிக்கு ஒர்க் ஷாப்பில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீப்பற்றி எரிந்தது.
கார், டிராக்டர் டீசல் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ரூ.20 லட்சம் சேதம்
தென்காசி மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில், கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
செங்கோட்டையில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
இதில் டிராக்டர், கார், லாரி போனற வாகனங்கள் உள்பட ரூ.20 லட்சம் மதிப்பிலானவை எரிந்து சேதம் அடைந்ததாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.