ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.200 கோடி அரசு நிலம் மீட்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.200 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் அறநிலைத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. பாப்பன்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால்சாமி கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. சைலேந்திரன் தலைமையில் சென்ற ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ஜெயகாந்தன் உள்ளிட்ட வருவாய்துறையினர் பூங்காவில் ஆய்வு செய்து ஆவடி மாநகர போலீசார் உதவியுடன் அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த நாகத்தா ஏரி ஆக்கிரமிப்பை மீட்டு அங்கு பூங்கா நிர்வாகத்தால் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ரோப்கார் இயக்கும் கட்டிடம், இமாலய ரைட், நீச்சல் குளம், பேப்பர் போர்ட், பேட்டரி ஸ்கூட்டர், ரெயில் தண்டவாளம் என ஆக்கிரமிப்பில் இருந்த அனைத்திற்கும் சீல் வைத்தனர்.
இதனை தொடர்ந்து குயின்ஸ்லேண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஓட்டலில் 5 சொகுசு விடுதிக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். இந்த பூங்காவில் மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.200 கோடி ஆகும். பாப்பான்சத்திரம் கிராமத்தில் குயின்ஸ்லேண்டுக்கு சொந்தமாக 177 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. அதனோடு இணைத்து இந்த 32.41 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.