18 மாதங்களில் 600 பேருக்கு ரூ.24 கோடி ஓய்வூதிய நிதி விடுவிப்பு- மேயர் இந்திராணி தகவல்


18 மாதங்களில் 600 பேருக்கு  ரூ.24 கோடி ஓய்வூதிய நிதி விடுவிப்பு- மேயர் இந்திராணி தகவல்
x

18 மாதங்களில் 600 ஊழியர்களுக்கு ரூ.24 கோடி ஓய்வூதிய நிதி விடுவிக்கபட்டு உள்ளது என்று மேயர் இந்திராணி கூறினார்.

மதுரை


18 மாதங்களில் 600 ஊழியர்களுக்கு ரூ.24 கோடி ஓய்வூதிய நிதி விடுவிக்கபட்டு உள்ளது என்று மேயர் இந்திராணி கூறினார்.

கடன் உதவி

மதுரை மாநகராட்சி மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியுடன் இணைந்து தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலமாக சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அதற்கான சிறப்பு முகாம், பெரியார் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார். பி.எம். திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த கடன் முதல் முறையாக பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது முறையாக பெறுபவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது முறையாக பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதுவும் விண்ணப்பம் செய்த அன்றே கடன் தொகை வழங்கப்படுகிறது.

இந்த முகாமுக்கு பின் மேயர் இந்திராணி கூறியதாவது:- மதுரை மாநகராட்சியில் அனைத்து கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் முடங்கி கிடந்த மாநகராட்சி நிர்வாகம், தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையின் கீழ் வீறுநடை போடுகிறது. இன்று (நேற்று) சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரம் மேம்படுகிறது.

முதல்-அமைச்சர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மக்கள் மட்டுமல்ல, அவர்களுக்காக உழைத்து கொண்டு இருந்த மாநகராட்சி ஊழியர்கள் கூட வஞ்சிக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சி 2021-ம் ஆண்டு வரை இருந்தது. அப்போது வரை அவர்கள் 2015-ம் ஆண்டு வரை மாநகராட்சியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கினர். 2016-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த பணப்பயனும் வழங்கவில்லை. ஆனால் பொறுப்பேற்றவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கும் பணியினை தொடங்கினோம்.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு கூட 270 பேருக்கு ஒரே நேரத்தில் சுமார் ரூ.9 கோடி ஓய்வூதிய பணப்பயன்களை வழங்கினோம். இதுவரை 18 மாதத்தில் மொத்தம் 600 பேருக்கு ரூ.24 கோடி ஓய்வூதிய நிதியை விடுவித்து இருக்கிறோம். குறுகிய காலத்தில் மாநகராட்சி வரலாற்றிலேயே 600 ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்கியது இதுவே முதல் முறை.

ஓய்வூதிய நிதி

தற்போதைய நிலையில் 2021-ம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற அனைத்து மாநகராட்சி ஊழியர்களுக்கும் ஓய்வூதிய நிதி வழங்கி விட்டோம். மீதமுள்ளவர்களுக்கு நிதியை வழங்க பணியினை தொடங்கி விட்டோம். மாநகராட்சியில் பணிகாலத்தில் இறக்கும் ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சியின் போது வழங்கப்படவில்லை. தற்போது சுமார் 200 பேருக்கு மேல் அந்த நிதி வழங்குவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மேயர் இந்திராணி, கீழசித்திரை வீதிகளில் நடந்த தூய்மை பணியினை தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மஞ்சப்பைகளை வழங்கினார்.


Next Story