தமிழகத்தில் ஆதி திராவிட நலவிடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் கயல்விழி தகவல்


தமிழகத்தில் ஆதி திராவிட நலவிடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் கயல்விழி தகவல்
x

தமிழகத்தில் ஆதி திராவிட நலவிடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சேலத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி தெரிவித்தார்.

சேலம்

ஆய்வு கூட்டம்

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் தடையின்றி கிடைத்திட தனியாக இணையதளம் உருவாக்கி அதன் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகளில் கடந்த காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆதி திராவிட நலவிடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கவும், இதுபோன்று யாரும் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த துறையின் சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.

ஆலோசனை

கூட்டத்தில் தாட்கோ தலைவர் உ.மதிவாணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர், ஆதிதிராவிடர் நலத்துறையின் இயக்குனர் ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, கலெக்டர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா சிங் (நாமக்கல்) சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஜெயராம், சின்ராஜ் எம்.பி., சதாசிவம் எம்.எல்.ஏ., சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் ஆகிய பகுதிகளில் தாட்கோ மூலம் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்காவின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

மாணவர்கள் விடுதியில் ஆய்வு

தொடர்ந்து அமைச்சர் கயல்விழி சேலம் மரவனேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவுகள் பற்றி மாணவர்கள் கேட்டு அறிந்தார்.


Next Story