தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் சிக்கியது
பரமத்திவேலூரில் தொழில் அதிபர் வீட்டில் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை முடிவில் ரூ.25 லட்சம் சிக்கியது. 3 சூட்கேஸ்களில் சொத்து ஆவணங்களையும் எடுத்து சென்றனர்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூரில் தொழில் அதிபர் வீட்டில் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை முடிவில் ரூ.25 லட்சம் சிக்கியது. 3 சூட்கேஸ்களில் சொத்து ஆவணங்களையும் எடுத்து சென்றனர்.அமலாக்கத்துறை சோதனை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கரா நகர் ராஜாஜி தெருவில் வசித்து வருபவர் டயர் கடை மணி என்கிற காளியப்பன் (வயது 70). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் டயர் கடை நடத்தி வந்தார். தற்போது உடல்நலக்குறைவால் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
காளியப்பன் வேடசந்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவராக கூறப்படும் வீரா.எஸ்.டி.சாமிநாதனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3-ந் தேதி மாலை 3 மணி அளவில் காளியப்பன் வீடு மற்றும் அவரது நிதி நிறுவனங்களில் 12 பேர் கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் அவரது வீடு மற்றும் நிதி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை செய்தனர்.
மீண்டும் விசாரணை
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று முன்தினம் தொழில் அதிபர் காளியப்பன் வீட்டில் அவரது மனைவி சாந்தி, மகள்கள் மற்றும் மருமகன்கள், அவரது அக்காள் மகன் ஆனந்த் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து நாமக்கல் பாரத ஸ்டேட் வங்கியின் துணை கிளை மேலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நகை மதிப்பீட்டாளர் அழைத்து வரப்பட்டு நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ரொக்க பணம், ஆபரணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி கணக்கீடு செய்தனர்.
ரூ.25 லட்சம் சிக்கியது
மேலும் காளியப்பன் மற்றும் அவரது மகள் பிரியங்கா ஆகியோரை வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்து சென்று வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள அரசு வங்கியில் அவர்களது வங்கி கணக்கு, லாக்கர் விவரங்கள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி வங்கியில் இருந்த ஆவணங்களை பெற்று சென்றனர். அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று 3-வது நாளாக காளியப்பன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு நிறைவு பெற்றது. தொடர்ந்து 3 நாட்களாக, அதாவது சுமார் 35 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
3 சூட்கேஸ்களில்...
இந்த சோதனையில் காளியப்பனின் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.25 லட்சம் ரொக்கம் சிக்கியது. சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ரொக்க பணத்தை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்த அமலாக்கத்துறையினர் 3 சூட்கேஸ்களில் சொத்து ஆவணங்களை எடுத்து சென்றனர்.