போராடியதால் கைதானவருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்:- குண்டர் சட்டத்தில் விதிமீறல் இருந்தால் ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் -மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
குண்டர் சட்டத்தில் விதிமீறல் இருந்தால் ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் விதிப்போம் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்தது.
குண்டர் சட்டத்தில் விதிமீறல் இருந்தால் ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் விதிப்போம் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்தது.
4 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம்
தென்காசி மாவட்டம் ஆத்துவழி கிராமத்தைச் சேர்ந்த சுனிதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "எனது கணவர் ஜெயராமன். திருமங்கலம்-ராஜபாளையம், தென்காசி-செங்கோட்டை பகுதியில் 4 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தினால் விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்பதால் வேறு பகுதி வழியாக அமைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதற்காக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது. கலெக்டரின் இந்த உத்தரவை ரத்து செய்து, எனது கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல மாரியம்மாள் தாக்கல் செய்த மனுவில், என் மகன் சுந்தர்ராஜன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து, அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
நீதிபதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய வழக்கு
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தடுப்புக்காவல் வழக்குகளை கையாளும் போது நிபந்தனைக்கு உட்பட்டவர்களாக ஆகிவிட்டோமா? என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. இந்த வழக்கு எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தமிழகம் முதல் இடம்
நம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
அதாவது, கடந்த ஆண்டு தமிழகத்தில் 1,775 குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. ஆனால் தெலுங்கானாவில் 396, குஜராத்தில் 372 உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக குண்டர் சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கை குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே குண்டர் சட்ட கைது நடவடிக்கைகளில் தமிழகம் முதல் இடத்தை பிடித்து இருப்பது தெரியவருகிறது.
மதுரை ஐகோர்ட்டை ெபாறுத்தவரை, கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 961 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. இதில் 517 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 445 வழக்குகளில் குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 வழக்குகள் குண்டர் சட்ட கைது காலம் முடிந்ததால் தானாகவே காலாவதியாகிவிட்டன.
ரூ.25 ஆயிரம்
ஒரு வழக்கில் கூட குண்டர் சட்ட உத்தரவு உறுதி செய்யப்படவில்லை. மனுவை பரிசீலனை செய்வதில் தாமதம் ஏற்படுதல், மனுவை பரிசீலனை செய்யாதது, கைதானவர்களுக்கு உரிய ஆவணங்களை வழங்காதது, சட்டவிரோத ஆவணங்கள் வழங்கியது போன்ற காரணங்களுக்காக குண்டர் சட்ட உத்தரவுகளை ஐகோர்ட்டு ரத்து செய்கிறது.
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தினமும் ஏராளமான ஆட்கொணர்வு வழக்குகள் தாக்கல் ஆகின்றன. இந்த வழக்குகளில் 4 முதல் 6 மாதங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
திருமங்கலம்- ராஜபாளையம்- செங்கோட்டை இடையிலான 4 வழிச்சாலை பணிக்கான நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயராமன் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார். அவர் மீதான 2 வழக்குகளில் கூறப்படும் சம்பவங்கள் 4 சுவர்களுக்குள் நடந்துள்ளன. அந்த சம்பவங்களால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் ஜெயராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு 4 வாரத்தில் தமிழக அரசு ரூ.25 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்.
அரசுக்கு அபராதம் விதிப்போம்
சவுந்தரராஜன் வழக்கில், மனதை செலுத்தாமல் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
இதுதொடர்பான கோர்ட்டின் உத்தரவுகளை தமிழக அரசு தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
குண்டர் சட்ட கைது உத்தரவுகளை பிறப்பிக்கும் போது அதிகாரிகள் உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிப்பதில் சட்ட விதிமீறல் இருப்பது உறுதியானால் ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.