71,103 பயனாளிகளுக்கு ரூ.267 கோடியில் நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் வழங்கினார்


71,103 பயனாளிகளுக்கு ரூ.267 கோடியில் நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 71 ஆயிரத்து 103 பயனாளிகளுக்கு ரூ.267 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 71 ஆயிரத்து 103 பயனாளிகளுக்கு ரூ.267 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி‌ மைதானத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திறந்து வைக்கப்பட்ட பணிகள் பற்றிய விவரம் வருமாறு:-

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், ரூ.12 கோடியே 27 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, கலவை தாலுகா அலுவலக கட்டிடங்கள்,

ரூ.86 லட்சத்து 43 ஆயிரத்தில் சோளிங்கர், வாலாஜா, கலவை தாசில்தார் குடியிருப்பு கட்டிடங்கள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.5 கோடியே 64 லட்சத்து 58 ஆயிரத்தில் அரக்கோணம் மற்றும் ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

ரூ.27 லட்சத்து 14 ஆயிரத்தில் ஆற்காடு மற்றும் சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம், ரூ.39 லட்சத்து 65 ஆயிரத்தில் ஆற்காடு, சோளிங்கர், திமிரி, முகுந்தராயபுரம் அங்கன்வாடி கட்டிடம், ரூ.37 லட்சத்து 36 ஆயிரத்தில் சீக்கராஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.32 லட்சத்து 79 ஆயிரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

வகுப்பறை கட்டிடங்கள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.76 லட்சத்தில் லாலாப்பேட்டை, கலவையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம், உயர் கல்வித்துறை சார்பில், ரூ.5 கோடியே 60 லட்சத்தில் ,வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கூடுதலாக 30 வகுப்பறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.5 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் அரக்கோணம் தாலுகா அரிகிலபாடி கிராமத்தின் அருகில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைமட்ட சுவர் (தடுப்பணை) ஆக மொத்தம் 24 நிறைவடைந்த பணிகள் ரூ.150 கோடியே 58 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டது.

புதிய திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டப்பட்ட விவரம் வருமாறு :-

புதிய பஸ் நிலையம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10 கோடியே 25 லட்சத்தில் ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ரூ.7 கோடியே 46 லட்சத்தில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய பணிமனை கட்டிடங்கள் அமைக்கும் பணி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.4 கோடியில் கன்னிகாபுரம் - பொன்னமங்கலம் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.48 லட்சத்து 30 ஆயிரத்தில் ஆற்காடு வட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் கால்நடை மருந்தகம் அமைத்தல் ஆக மொத்தம் 5 பணிகளுக்கு ரூ.22 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரம் வருமாறு :-

ரூ.267 கோடி

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை, தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம், கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, வேளாண்மை விற்பனைத் துறை, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு துறை, தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்), வேளாண்மை பொறியியல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தோட்டக்கலைத்துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆவின், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, சமூக பாதுகாப்புத்துறை ஆகிய 28 துறைகளின் சார்பில் 71 ஆயிரத்து 103 பயனாளிகளுக்கு ரூ.267 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 302 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


Next Story