சேலம் அருகே துணிகரம்:தங்க நகைகள் வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி-கணவன்- மனைவி கைது


சேலம் அருகே தங்க நகைகள் வாங்கி தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

விவசாயி

பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் அருகே நொச்சிக்குளம் அருணகிரி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). விவசாயி. இவர், கடந்த வாரம் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார்.

அதில், பெரம்பலூர் கல்பாடி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி பாரதி என்பவர் மூலம் ஆத்தூர் அருகே வீரகனூரில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் சியமளா அறிமுகம் ஆனார். அவர், தனக்கு ஆத்தூரில் உள்ள நகைக்கடையில் குறைந்த விலையில் 75 பவுன் தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறினார். அதை உண்மை என்று நம்பிய நான், ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தை சேர்ந்த சியமளா மற்றும் அவரது தாய் விஜயா, சித்தி சித்ரா, தங்கை ஜீவா, அவரது கணவர் சிவக்குமார் ஆகியோரிடம் நகை வாங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி ரூ.25 லட்சம் கொடுத்தேன்.

ரூ.3 கோடி மோசடி

ஆனால் அவர்கள் நகைகள் எதுவும் வாங்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்கள். சமீபத்தில் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அனைவரும் செல்போன் எண்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாக சென்றுவிட்டார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும், என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவரது புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விவசாயி கந்தசாமியை போன்று மேலும் 10 பேரிடம் இதேபோல், நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கணவன்-மனைவி கைது

இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் உள்ள சியமளா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அதில், சுமார் ஒன்றரை கோடிக்கு பணப்பரிமாற்றம் மற்றும் நகைகள் வாங்கியதற்கான ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்ததை கைப்பற்றினர். இதையடுத்து இந்த மோசடி வழக்கில் சியமளாவின் தங்கை ஜீவா (33), அவரது கணவர் சிவக்குமார் (38) ஆகிய 2 பேரை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேசமயம், தலைமறைவாக உள்ள சியமளா உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story