சென்னை குற்றப்பிரிவு போலீஸ் எனக் கூறி டீக்கடைக்காரரிடம் ரூ.3¼ லட்சம் பறிப்பு


சென்னை குற்றப்பிரிவு போலீஸ் எனக் கூறி டீக்கடைக்காரரிடம் ரூ.3¼ லட்சம் பறிப்பு
x

நாமக்கல்லில் டீக்கடைக்காரரிடம் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் என மிரட்டி ரூ.3 லட்சத்து 34 ஆயிரம் பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

டீக்கடைக்காரர்

நாமக்கல்லில் அரசு போக்குவரத்து பணிமனை பின்புறம் உள்ள இ.பி.காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 50). இவர் பொய்யேரிக்கரை பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி மதியம் 3 மணியளவில், அவரது வீட்டுக்குள் திடீரென 3 பேர் கும்பல் நுழைந்தது.

அவர்கள் தாங்கள் சென்னை குற்றப்பிரிவு போலீசார் என்றும், ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி விற்பனை தொடர்பாக செல்லத்துரை மீது உள்ள வழக்கு குறித்து விசாரிக்க உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

ரூ.3.34 லட்சம் பறிப்பு

மேலும் அதற்காக செல்லத்துரையை சென்னைக்கு அழைத்து சென்று குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக மிரட்டி உள்ளனர். அப்போது வீட்டில் சோதனையில் ஈடுபடுவது போல நடித்து, பீரோவில் இருந்த ரூ.34 ஆயிரத்தை எடுத்துள்ளனர். மேலும் செல்லத்துரையின் செல்போனில் உள்ள "பேடிஎம்" செயலியில், அவரின் வங்கிக் கணக்கில் ரூ.3 லட்சம் இருப்பதை அறிந்த அந்த கும்பல், செல்லத்துரையை கைது செய்யாமல் வீட்டிலேயே விட்டுச் செல்ல அந்த பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து தருமாறு மிரட்டி உள்ளனர்.

பின்னர் காசோலையோடு பரமத்தி சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு செல்லத்துரையை அழைத்துச் சென்றனர். அவரின் 2 காசோலைகளை பயன்படுத்தி அவர் கையாலேயே ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சத்தை எடுக்க வைத்து பணத்தை பறித்துச் சென்றனர். அந்த போலி போலீஸ் கும்பலிடம், செல்லத்துரை மொத்தமாக ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்தை பறி கொடுத்து உள்ளார். மேலும் செல்லத்துரையிடம் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை ஒன்றையும் 3 பேரும் மிரட்டி வாங்கிச்சென்று உள்ளனர்.

மீண்டும் பணம் எடுக்க முயற்சி

இதனிடையே செல்லத்துரையின் மகளுக்கு ஒரு வாரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு அவரது மகள் வந்துள்ளார். அப்போது செல்போனில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் எடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டு செல்லத்துரையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பழைய வழக்கு தொடர்பாக சென்னை குற்றப்பிரிவு போலீசார் தன்னை மிரட்டி பணம் பறித்துச் சென்றதாகவும், மற்றொரு காசோலையையும் அவர்கள் எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லத்துரையின் மகள், வங்கியை தொடர்பு கொண்டு காசோலையை யாரேனும் கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமத்தி சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்ற ஒருவர் செல்லத்துரையின் காசோலையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்று உள்ளார். இது குறித்த தகவல் அறிந்த செல்லத்துரை குடும்பத்தினர் நாமக்கல் போலீசில் புகார் அளித்தனர்.

போலி போலீசார் கைது

அதன்பேரில் வங்கிக்கு சென்ற நாமக்கல் போலீசார் செல்லத்துரையின் காசோலையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற திருச்செங்கோடு அருகே உள்ள இலுப்புலியை சேர்ந்த மாதேஸ்வரனை (35) சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் திருச்செங்கோட்டை சேர்ந்த சபரீஷ் என்கிற சபரிநாதன் (35), சேலம் கோரிமேட்டை சேர்ந்த இலியாஸ் (31) ஆகியோருடன் சேர்ந்து மாதேஸ்வரன், செல்லதுரை வீட்டுக்கு சென்று, குற்றப்பிரிவு போலீசார் போல நடித்து பணத்தைப் பறித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து 3 போலி போலீசாரையும் நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

கொலை, கொள்ளை வழக்குகள்

அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மாதேஸ்வரன் வக்கீலுக்கு படித்து உள்ளதும், சபரிநாதன் மற்றும் இலியாஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நாமக்கல்லில் டீக்கடைக்காரரிடம் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் என மிரட்டி ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்தை 3 பேர் கும்பல் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story