ஆன்லைனில் 2 பேரிடம் ரூ.3 லட்சம் மோசடி
ஆன்லைனில் 2 பேரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி சேவூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சிவம் (வயது 28). இவரின் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த அக்டோபர் மாதம் பகுதிநேர வேலை வாய்ப்பு இருப்பதாக ஒரு பதிவு வந்தது. அதில், ஆன்லைனில் முதலீடு செய்து குறிப்பிட்ட பொருட்கள் வாங்கி, மற்றொருவருக்கு விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கமிஷனாக அதிகளவு பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் வங்கிக்கணக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய சிவம் அந்த ஆன்லைனில் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பணம் முதலீடு செய்தார். அதில், அவர் செலுத்தும் தொகைக்கு ஏற்ப கமிஷன் பணம் அதிகரிப்பதாக காண்பித்தது. அதனால் சிவம் ரூ.1,70,000 செலுத்தி உள்ளார். இதேபோன்று சத்துவாச்சாரியை சேர்ந்த பூனம் என்பவரும் ஆன்லைனில் ரூ.1,44,000 செலுத்தினார். இருவரின் கணக்கிலும் அதிகளவு பணம் இருப்பது போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு காண்பித்தது.
அவர்கள் அதனை எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை. அதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட ஆன்லைன் முகவரியை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. அப்போது தான் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இதுகுறித்து இருவரும் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.